வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association
UEN: T19SS0199A

பொழில் பன்னாட்டு இலக்கிய ஆய்விதழ் (அரையாண்டிதழ்)
POZHIL INTERNATIONAL LITERATURE RESEARCH JOURNAL (BIANNUALLY)
E-ISSN: 3041-0703

பொழில் பன்னாட்டு இலக்கிய ஆய்விதழ் (அரையாண்டிதழ்) - நுழைவாயில்

பொழில் பன்னாட்டு இலக்கிய ஆய்விதழ் (அரையாண்டிதழ்) நுழைவாயில் வந்தோரை வணங்கி மகிழ்கிறோம். அன்புடன் வரவேற்கிறோம்!

          உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டுமே செம்மொழிகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் தமிழ் மொழி தலையாயது, காரணம் உலகில் வாழும் யாவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்த அறவழிகளையும் நெறிமுறைகளையும் எண்ணற்ற புலவர் பெருமக்கள் அருளிச் சென்றுள்ளனர்.

          இந்த நவீன உலகத்தில் அதிவேக வாழ்க்கை முறையில் எதிர்கால வாழ்வை எண்ணியவாறு பயணிக்கிறோம். ஆகவே அருந்தமிழ் அருளியுள்ள நல்ல பல நெறிமுறைகளை கற்றறிய மறந்துவிடுகிறோம்.

          சிங்கப்பூரில் தமிழ்மொழியானது, ஆட்சிமொழிகளுள் ஒன்று. சிங்கப்பூர் அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி தமிழ்மொழி வளரவும் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருவது போற்றுதற்குரியது.

          கடந்த 11-11-2017 அன்று தொடக்க விழா கண்ட “வாழ்வியல் இலக்கியப் பொழில்” பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்குமான இணைப்புப் பாலமாக இருந்து, அவர்களுடைய முக்கிய தேவைகளுள் ஒன்றான வாழ்வியல் நெறிமுறைகளை அலசி ஆராய்ந்து சிறுவயது முதல் தக்க நூல்கள் கூறும் நல்ல பல கருத்துகளைத் திரட்டி, யாவரும் எளிதில் பின்பற்றும் வகையில் கொடுத்து தமிழ் இலக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் மாதாந்திர நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் நடத்தி வருகிறது.

           82 மாதங்கள் கடந்து, தமிழ்க் குடும்பங்கள் பல இணைந்து நடத்தும் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" என்ற பெயரில் சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் அமைப்பு மாதாந்திர நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளுள் ஒன்று. குறிப்பாக சங்க இலக்கிய நூல்களை கையில் எடுக்கவே பயந்திருப்போரிடையே புதிய புத்தாக்கச் சிந்தனைகளோடு வீறுநடை போட்டு இயங்கிவரும் இலக்கிய அமைப்பு.

           வாழ்வியல் இலக்கியப் பொழில், சிங்கப்பூர் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாதாந்திற்ற நிகச்சிகளில், குறிப்பாக COVID-19 கொரொணா தொற்று காலத்திலிருந்து, மாதாந்திர நிகழ்ச்சிகளில் வெளிநாடு வாழ் தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் என பலரையும் இணைத்துகொண்டு செயல்படுகிறது.

          சங்க இலக்கிய நூல்களில் இருந்து சாறு பிழிந்து கொடுப்பது போல முக்கிய வாழ்வியல் தத்துவங்களை வழங்கி வருகிறது. சங்க இலக்கியக் கூறுகளை மேலும் ஆய்வுசெய்து ஆவணப்படுத்தவும், கல்வியாளர்களின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் தரத்தில் பன்னாட்டு ஆய்விதழ் நடத்த ஊக்கமூட்டியதன் பலனாக, பலருடைய வேண்டுகோளுக்கு இணங்க இந்த பொழில் பன்னாட்டு இலக்கிய ஆய்விதழ் திட்டமிட்டு தொடங்கப்படுகிறது. இது ஓர் அரையாண்டிதழ் ஆகும். தகுதி வாய்ந்த பேராசிரியர்களின் மேற்பார்வையில் வெளிவரும் இவ்விதழில் பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியகள் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

          சங்க இலக்கியம் நூல்களைப் படித்து, சவால்களை முறியடித்து வாழ்வோம்; வெல்வோம்.

இன்ப தமிழைப் பருக !
இலக்கியப் பொழிலுக்குள் வருக !